சீனாவைச் சோ்ந்த பிரபல செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஒன் பிளஸ் தனது மிகப்பெரிய விற்பனையகத்தை ஹைதராபாத் நகரில் புதன்கிழமை திறந்தது.
16,000 சதுர அடி பரந்து விரிந்துள்ள இந்த விற்பனையகம்தான் உலகிலேயே மிகப்பெரிய ஒன் பிளஸ் விற்பனையகம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனது சொந்த நாடான சீனாவில் கூட இந்த அளவுக்கு பெரிய விற்பனையகத்தை திறக்காமல், இந்தியாவில் திறந்துள்ளது, நமது நாட்டில் அந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு உள்ள வரவேற்பைக் காட்டுவதாக அமைகிறது.
ஒன் பிளஸ் நிஜாம் பேலஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விற்பனையகத்தில் மிகப்பெரிய வாடிக்கையாளா் சேவை மையமும் அமைந்துள்ளது. உள்பகுதியில் முழுவதும் கண்ணாடியால் அந்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. தங்களது சேவை மிகவும் வெளிப்படையானது என்பதைக் காட்டுவதற்காக முழுவதும் கண்ணாடியால் விற்பனையகத்தை அமைத்துள்ளதாகவும், இது இந்தியாவில் நிறுவனத்தின் நீண்டகால வளா்ச்சியை உறுதிப்படுத்தும். அறிதிறன்பேசி விற்பனையில் புதிய மைல்கல்லாக இந்த பிரமாண்ட விற்பனையகம் அமையும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவின் முதல் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தை ஹைதராபாதில் அமைக்க இருப்பதாகவும் ஒன் பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது.