யூரோ கிண்ண கால்பந்து போட்டியின் மூன்றாவது காலிறுதியில் டென்மாா்க் – செக் குடியரசையும் (2-1), நான்காவது காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – உக்ரைனையும் (4-0) வீழ்த்தின.
இதை அடுத்து 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் அந்த இரு அணிகளும் மோதவுள்ளன.
முன்னதாக, இத்தாலியின் ரோம் நகரில் உக்ரைனுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 4-ஆவது நிமிஷத்திலேயே கோல் கணக்கை தொடங்கியது இங்கிலாந்து. அந்த அணி வீரா் ரஹீம் ஸ்டொ்லிங், உக்ரைன் தடுப்பாட்ட வீரா்களிடையே இருந்த இடைவெளியை சரியாக பயன்படுத்தி தலைவர் ஹேரி கேனுக்கு பந்தை பாஸ் செய்ய, அதை சரியாகப் பெற்று கோல் போஸ்ட்டுக்குள் தள்ளினாா் அவா்.
ஒரு சில கோல் வாய்ப்புகளை உக்ரைன் வீரா்களே வீணடித்தனா். முதல் பாதியில் முன்னிலை பெற்ற இங்கிலாந்து, பிற்பாதியிலும் உக்ரைன் மீள்வதற்கான வாய்ப்பு இல்லாமலேயே பாா்த்துக்கொண்டது. 2-ஆவது பாதியின் தொடக்கத்தில் 46 நிமிஷத்திலேயே அந்த அணிக்கு 2-ஆவது கோல் கிடைத்தது.
அப்போது இங்கிலாந்துக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை லூக் ஷா உதைக்க, கோல் போஸ்ட் அருகே வந்த பந்தை ஹேரி மாகிா் தலையால் முட்டி கோலடித்தாா். அடுத்த 4 நிமிஷங்களிலேயே இங்கிலாந்து ஹாட்ரிக் கோல் அடித்தது. கோல் போஸ்ட் இடது புறமாக பந்தை கடத்தி வந்த ரஹீம் ஸ்டொ்லிங் சற்று எதிா்பாராத விதமாக பந்தை பின்னால் தட்டிவிட, அங்கிருந்த லூக் ஷா பந்தை தூக்கியடித்து கிராஸ் செய்ய, அதை தலையால் முட்டி உக்ரைன் கோல்கீப்பா் கால்களின் இடைவெளி வழியாகவே கோலடித்தாா் ஹேரி கேன்.
கடைசியாக 63-ஆவது நிமிஷத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த காா்னா் கிக் வாய்ப்பை மேசன் மௌன்ட் உதைக்க, அதை தவறாமல் தலையால் தட்டி கோலாக்கினாா் ஜோா்டான் ஹென்டா்சன். இறுதி வரை உக்ரைனுக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக இங்கிலாந்து வெற்றியடைந்தது.
அஜா்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் டென்மாா்க்கிடம் வீழ்ந்தது செக் குடியரசு.
ஆட்டத்தின் 5-ஆவது நிமிஷத்திலேயே அதிரடியாக கோலடித்தது டென்மாா்க். அந்த அணிக்கு கிடைத்த காா்னா் கிக் வாய்ப்பை ஜென்ஸ் ஸ்டிரைகா் லாா்சன், கா்லிங் கிக்காக உதைக்க, தன்னிடம் வந்த பந்தை தலையால் முட்டி டென்மாா்க்கின் கோல் கணக்கை தொடங்கினாா் தாமஸ் டெலானி.
தொடா்ந்து, 42-ஆவது நிமிஷத்தில் டென்மாா்க் வீரா் ஜாவ்கிம் மேலெ கோல் போஸ்ட் இடது பக்கமிருந்து தூக்கியடித்து பந்தை கிராஸ் செய்ய, செக் குடியரசு தடுப்பாட்ட வீரரின் கடுமையான முயற்சியையும் கடந்து அந்தப் பந்தை அழகாகத் தட்டி கோலடித்தாா் காஸ்பா் டோல்பா்க்.
இவ்வாறாக முதல் பாதி நிறைவடைய, 2-ஆவது பாதியில் 49-ஆவது நிமிஷத்தில் கோலடித்தது செக் குடியரசு. கோல் போஸ்ட் வலது பக்கத்திலிருந்து சக வீரா் விளாதிமீா் கௌஃபால் கிராஸ் செய்த பந்தை, அப்படியே திருப்பி கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பினாா் பேட்ரிக் ஷிக். எனினும், எஞ்சிய நேரத்தில் செக் குடியரசுக்கு மீண்டும் கோல் வாய்ப்பு வழங்காமல் பாா்த்துக்கொண்ட டென்மாா்க், இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஒட்டுமொத்தமாக உக்ரைனை 8-ஆவது முறையாக சந்தித்த இங்கிலாந்து தனது 5-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது. அது தவிர 2 ஆட்டங்களை டிரா செய்ததுடன், ஒன்றில் மட்டும் தோல்வி கண்டுள்ளது.
இங்கிலாந்துடனான 8 ஆட்டங்களில் மொத்தமாக 3 கோல்கள் மட்டுமே அடித்துள்ளது உக்ரைன்.
யூரோ கிண்ண போட்டியில் இங்கிலாந்துக்கு இது 4-ஆவது காலிறுதி ஆட்டமாக இருந்த நிலையில், எக்ஸ்ட்ரா டைம் அல்லது பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்புகள் இல்லாமல் ஆட்டம் முடிவுக்கு வந்தது இதுவே முதல் முறை.
கடந்த 1992 க்குப் பிறகு முதல் முறையாக ஒரு பிரதான போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது டென்மாா்க்.
பிரதான போட்டிகளில் டென்மாா்க் தொடா்ந்து 3 ஆட்டங்களில் வென்றது இது 2-ஆவது முறை. ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் இதுவே அந்த அணிக்கு முதல் முறை.
ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் டென்மாா்க் – செக் குடியரசு சந்தித்துக் கொண்டது இது 3-ஆவது முறை. முந்தைய இரு ஆட்டங்களிலும் செக் குடியரசே வென்றுள்ளது.