‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புதிய படம் ‘கபாலி’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ரஜினி, வெள்ளை தாடி, தலைமுடியுடன் ஒரு டான் கெட்டப்பில் நடித்து வருகிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள பிரபல ஸ்டுடியோவிலும், சென்னை விமான நிலையத்திலும் சமீபத்தில் படமாக்கினர்.
இந்நிலையில், இப்படத்தை வரும் 2016, ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படம் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், தற்போதுதான் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதால், அதற்குள் படத்தை முடிக்க முடியாது என்பதற்காக படத்தை தமிழ் புத்தாண்டு வெளியிட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் ரஜினியுடன், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ரித்விகா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன், கிஷோர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்தகட்டமாக படக்குழுவினர் மலேசியா புறப்படவுள்ளனர்.