விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி’ படம் வருகிற அக்டோபர் 1-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படம் வெளியாகும் அதேநாளில், ‘எம்.எஸ்.ஜி.-2’ என்ற இந்தி படமும் தமிழில் வெளியாகிறது. இப்படத்தில் வடநாட்டில் உள்ள பிரபல சாமியாரான குர்மீத் ராம் நடித்துள்ளார்.
வடநாட்டில் அதிரடி சாமியாரான இவர், கடந்த ஆண்டு எம்.எஸ்.ஜி. (மெசேஞ்சர் ஆப் காட்) என்ற பெயரில் படத்தை இயக்கி, அதில் இவரே நடிக்கவும் செய்திருந்தார். இதில் குர்மீத் ராம் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார். இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிவந்தது.
அதன் தொடர்ச்சியாகவே, தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகமும் ‘எம்.எஸ்.ஜி.-2’ என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. இப்படமும் தமிழில் அதே பெயருடன் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது.
முந்தைய பாகத்தைவிட, இதில், கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருக்கின்றன. இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.