ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘பாய்ஸ்’ படத்தில் 5 கதாநாயகர்களில் ஒருவராக நடித்தவர் நகுல். இவர் நடிகை தேவயானியின் தம்பியாவார். ‘பாய்ஸ்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறவே, அப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட, சில நடிகர்கள் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் நகுலும், தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் சரியாக பயன்படுத்தி இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களின் வரிசையில் இடம்பிடித்து உள்ளார்.
‘பாய்ஸ்’ படத்தை தொடர்ந்து நகுல் நடித்த ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’, ‘நான் ராஜாவாக போகிறேன்’, ‘வல்லினம்’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
சினிமாவில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி வரும் நகுல், தனது சொந்த வாழ்க்கையிலும் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறியிருக்கிறார். ஆம், நகுலுக்கும் ஸ்ருதி பாஸ்கர் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு தங்கள் திருமணத்தை நிச்சயித்துள்ளனர். இந்த செய்தியை நகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதோடு, நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்டுள்ள படங்களையும் வெளியிட்டுள்ளார்.