சிறைச்சாலை உட்பட பல திரைப்படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை லிசி. பிரியதர்ஷனும், லிசியும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து வாழ்கின்றனர். ஒருவர் மீது ஒருவர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர்.
இதில் ஒரு வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரியதர்ஷன், லிசி ஆகியோருக்கு இடையே சமரசம் ஏற்பட்டது. இருவரும் கீழ் கோர்ட்டில் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து விவாகரத்து பெற்றுக் கொள்வதாக கூறினார்கள்.
இதையடுத்து ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், சென்னை குடும்ப நல கோர்ட்டில், லிசியும், பிரியதர்ஷனுக்கும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.