தமிழ் நடிகர் சங்கம் என பெயர் மாற்ற கோரிக்கை!

By On · no Comments · In

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

 
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நாளை (18–ந் தேதி) நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பங்கேற்கிற அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சிவாஜி, எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பல ஆளுமைகள் கொண்ட மாபெரும் அமைப்பாக நடிகர் சங்கம் விளங்குகிறது.

 
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன் தென்னிந்திய நடிகர் சங்கமாக உருவாக்கப்பட்ட இச்சங்கம் பின்னர் பிரிந்து கேரள நடிகர்களுக்கென அம்மா என்றும், ஆந்திர நடிகர்களுக்கென அப்சிசி என்றும், கன்னட நடிகர்களுக்கென கேப்பா என்றும் அவரவர் மொழி சார்ந்த, பகுதி சார்ந்த தனித்தனி சங்கங்கள் ஏற்பட்டு விட்ட பின்னரும் கூட, தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் இச்சங்கம் செயல்படுவது ஏற்புடையது அல்ல.
சிவாஜி கூட மலையாள படத்தில் நடிக்கும் முன் அங்கிருக்கும் நடிகர் சங்கமான ‘அம்மா’வில் உறுப்பினரான பின் தான் நடித்தார். தமிழ்த் திரையுலகத்திற்கு முற்றிலும் சொந்தமான இச்சங்கம் “தமிழ் நாடு நடிகர் சங்கம்“ என பெயர் மாற்றம் அடைவது தான் மிகச்சரியானதாக இருக்கும்.

 
தேர்தலில் பங்கேற்கிற இரண்டு அணிகளிலும் எனது நண்பர்கள், என் மதிப்பிற்குரியவர்கள் இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகின் முக்கிய அங்கமாக திகழ்கிற இச்சங்கத்தின் தலைமையின், முக்கியப் பொறுப்புகளில் தகுதியும், திறமையும், நேர்மையும் மிக்க தமிழர்கள் இடம் பெற வேண்டும் என்கிற எனது விருப்பத்தினை இச்சமயத்தில் நான் தெரிவிக்கிறேன். ஓட்டளிக்கப் போகும் திரைப்பட நாடக கலைஞர்கள் இன உணர்வோடும் மான உணர்வோடும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

 
நாம் வந்தவரை எல்லாம் வாழவைப்போம் அது எமது இனத்தின் பெருமை, சொந்தவரை மட்டுமே தலைமை ஏற்க வைப்போம் அது நமது இனத்தின் அடிப்படை உரிமை. இதனை கலையுலக சொந்தங்கள் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்கக் வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 %
Tweet This